:
Breaking News

கடந்த 25 ஆண்டுகளாக தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது நுகர்வோர் எக்ஸ்பிரஸ்.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

  

டெக்ஸ்டைல் மற்றும் பின்னலாடை தொழில்துறை வளர்ச்சிக்காக கடந்த 2000 ஆவது ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் வெள்ளி விழா கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி, மாலை 4 மணியளவில் திருப்பூர், அவிநாசி சாலை, அணைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள IKF குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இனிய விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர். திரு.சக்திவேல் அவர்கள், சேவை செம்மல், மருத்துவ அறிஞர்.டாக்டர். முருகநாதன் அவர்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் அவர்கள். துணைத் தலைவர் திரு. SNQS.இளங்கோவன் அவர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு.திருக்குமரன் அவர்கள், பொருளாளர், திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள், திருப்பூர் மாநகர மேயர் திரு .தினேஷ் குமார் அவர்கள். துணை மேயர் திரு. MKM பாலசுப்பிரமணியன் அவர்கள். துணைச் செயலாளர்கள் திரு.குமார் துரைசாமி அவர்கள், திரு. ஆனந்த் அவர்கள். நிட்மா தலைவர் திரு.அகில் ரத்னசாமி அவர்கள், சைமா தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள், முன்னாள் தலைவர் திரு.வைகிங் ஈஸ்வரன் அவர்கள், திருப்பூர் டையர்ஸ் அசோசியேசன்  தலைவர் திரு.காந்திராஜன் அவர்கள், சிம்கா தலைவர் திரு.விவேகானந்தன் அவர்கள், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் திரு.தனசேகர் அவர்கள், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் திரு.அருள்செல்வம் அவர்கள், உள்ளிட்ட ஏராளமான தொழில்துறையினர், இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், சேவையாளர்கள், தொழில்துறையில் சாதித்த தொழில்துறை சாதனையாளர்கள், விளம்பரதாரர்கள், நூற்றுக்கணக்கான நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வாசகர்கள் என ஏராளமானோர் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவரையும் வரவேற்று,

நமது ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்கள் வரவேற்ரை நிகழ்த்தினார்.


அவர் தனது உரையில், இந்த இனிய விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து தொழில்துறை தலைவர்களையும், மருத்துவ மாமணிகளையும், வாசகப் பெருமக்களையும், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் ஆளுமைகள் அனைவரையும், பொது மக்களையும், இருகரம் கூப்பி வருக, வருக என வரவேற்று எனது உரையை தொடங்குகிறேன். நமது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் கடந்த 2000வது ஆண்டு தொடங்கப்பட்டு டெக்ஸ்டைல் பின்னலாடை தொழில்துறை வளர்ச்சிக்காகவே கடந்த 25 ஆண்டு காலமாக சேவையாற்றி வருகிறது. இந்த இதழை தொடங்குவதற்கு முன்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பெருமதிப்பிற்குரிய பத்மஸ்ரீ.டாக்டர்.சக்திவேல் அண்ணன் அவர்களை சந்தித்து திருப்பூர் தொழில்துறை வளர்ச்சிக்காக தொடங்கப்படும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இதழின் நோக்கம், அதன் எதிர்கால திட்டங்கள், வழங்க இருக்கும் சேவைகள் குறித்து விளக்கம் அளித்து தொழில்துறையின் மூத்த சான்றோர் ஆகிய தாங்கள் வாழ்த்து கடிதம் வழங்கி தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனது நோக்கத்தை நன்கு உள்வாங்கிக் கொண்ட அவர் நிச்சயம் உங்களைப் போன்ற இளைஞர்களின் சேவை திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று வாழ்த்தி, வாழ்த்து கடிதம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் நிட்மா தலைவர் திரு.அகில் ரத்னசாமி அவர்களை தொலைபேசி வழியாக அழைத்து திரு.முத்துக்குமார், தொடங்கும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் என்ற டெக்ஸ்டைல் மாத இதழுக்கு நீங்களும் ஒரு வாழ்த்து கடிதம் வழங்குங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். இப்படி தொழில்துறை தலைவர்கள் மற்றும் சான்றோர்களுடைய வாழ்த்துக்களை பெற்று தொடங்கி இன்றைக்கு அதே தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்த வெள்ளி விழாவில் உங்கள் முன்பாக நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம், உங்களின் பேரன்பும், பெரும் நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாக நீங்கள் அளித்து வரும் ஆதரவும் தான் காரணம்  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் சார்பாக நன்றிகளை தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இதழ் தொழில்துறையினரை அடையாளப்படுத்தி ஒவ்வொருவரும் செய்து வரும் தொழில்கள் பற்றியும், சேவைகள் பற்றியும், தெள்ளத் தெளிவாக கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக செய்திகளாக வெளியிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஊடகத்துறையில் பத்திரிகையாக மட்டும்  வலம் வந்து கொண்டிருந்த நுகர்வோர் எக்ஸ்பிரஸ், டெக்ஸ்டைல் நியூஸ் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் காணொளிக் காட்சியாகவும், வீடியோ பேட்டிக்களாகவும், தொழில்துறையினரின் சாதனை சரித்திரங்களையும், அவர்கள் செய்து வரும் தொழிலை பற்றிய தகவல்களை தொழில் உலகிற்க்கு எடுத்துரைக்கும் வலிமையான கருவியாகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழில்துறையினரை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வரும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் குழுமம் இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 750 க்கும் மேற்பட்ட தொழில்துறையினரின் தொழில் சார்ந்த பேட்டிகளை வெளியிட்டு இருக்கிறது. 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் நமது யூடியூப் சேனலை பார்வையிட்டு வருகின்றனர். இந்த உத்வேகமான பயணத்திற்கு உறுதுணையாக பக்க பலமாக இருந்து ஆதரவு அளித்து வரும் தொழில்துறையினர், தொழில்துறை தலைவர்கள் நமது இதழின் வாசகப் பெருமக்கள் இருந்து வருகின்றனர். வெள்ளி விழா கொண்டாடுகிற இந்த தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எங்களது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது ஒத்துழைப்போடு நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இன்னும் உத்வேகத்தோடு, உறுதித் தன்மையோடு, தொழில்துறை வளர்ச்சிக்காக அடுத்த 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 75 ஆண்டுகள், நூறு ஆண்டுகள் என பயணிக்கும் என்ற உத்தரவாதத்தோடு விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருக, வருக என வரவேற்று மகிழ்கிறேன். இவ்வாறு அவர் தனது  வரவேற்புரையில்  தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து விழாவை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்.சக்திவேல் அவர்கள் ஆற்றிய தலைமை உரையில் தெரிவித்ததாவது. இந்த இனிய விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் திரு முத்துக்குமார் அவர்கள் என்னை சந்தித்தார். திருப்பூர் டெக்ஸ்டைல் பின்னலாடை தொழில் துறைக்கு என்று ஒரு பத்திரிகை தொடங்குகிறேன் அந்த பத்திரிகை பெயர் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இந்த இதழ் தொழில்துறை வளர்ச்சிக்காக தொடர்ந்து வெளியிட ஆசைப்படுகிறேன் என கூறினார். அவர் என்னிடம் கூறிய கருத்துக்களில் ஒரு உறுதித்தன்மை இருந்ததால், உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் தொழில் துறைக்கு நிச்சயம் உதவ வேண்டும். நிச்சயம் நீங்களும் வளர்வீர்கள். தொழிலும் வளரும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் வழங்கினேன். அன்று தொடங்கிய நுகர்வோர் எக்ஸ்பிரஸின் பயணம் இதோ 25 ஆண்டுகள் கடந்து இந்த வெள்ளி விழாவிலும் நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உணர்கிறேன்.  அப்போது எனக்கு இப்படி ஒரு நிகழ்வெல்லாம் நடக்கப் போகிறது, இந்த பத்திரிகை இத்தனை காலம் நிலைத்து வளரப் போகிறது என தெரியவில்லை. இதற்குக் காரணம் இந்த பத்திரிகை ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்கள் இனிய பண்புக்கு சொந்தக்காரர். தனது பெயரில் இருக்கிற முத்தைப் போன்றவர். தொழில் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக எடுத்துக் கொண்டு 24 மணி நேரம் அவர் செயல்பட்டு வருவதை நான் கடந்த 25 ஆண்டு காலமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு மனிதர் இந்த தொழில்துறைக்கு இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிகை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் தொழில்துறையினரை பாராட்டி, அவர்களை அடையாளப்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி அவர்கள் தொழிலில் அடுத்த கட்ட சாதனை செய்ய உந்து சக்தியாகவும் அவர் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. கொரோனா காலங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாத ஒரு நிலை இருந்த நேரத்தில் தைரியமாக முடிவெடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நுகர்வோர் எக்ஸ்பிரஸ் டெக்ஸ்டைல் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி இன்றைக்கு 

அந்த சேனலையும் பெரும் முயற்சியெடுத்து, வளர்த்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்களை பெற்று, தொடர்ந்து வளர்ந்து வருவதோடு மட்டும் அல்லலாமல், 16 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட சேனலாக அந்த டெக்ஸ்டைல் நியூஸ் சேனல் திகழ்கிறது என்றால், அவனது அர்ப்பணிப்பு ,உழைப்பு, இந்த தொழில் மேல் அவர் வைத்திருக்கிற அக்கறையை அது காட்டுகிறது. நான் தொழில் வர்த்தக பயணமாக வெளிநாடுகள் சென்று திரும்பும் பொழுது முதல் தொலைபேசி அழைப்பு அவருடையதாக தான் இருக்கும். வெளிநாடுகளில் திருப்பூர் தொழில்துறையினருக்காக வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்த முயற்சி எடுக்கிறீர்களே அண்ணா, அந்த முயற்சியின் நிலை எந்த அளவு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என கேட்பார். நான் அதை தொலைபேசி வழியாக அவருக்கு தெரிவித்து கொண்டே வருவேன். நான் வீடு வந்து சேர்வதற்குள் அந்த செய்தியை அவர் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிட்டு விடுவார். தொழில்துறையினர் எப்போதும் தைரியமாக வெற்றிகரமாக முன்னேற வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் அக்கறை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மதிப்புமிக்கது. இந்த இனிய வெள்ளி விழாவில் நானும் கலந்து கொள்கிறேன் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொழில்துறையை பாதுகாக்க, தொழில்துறை குறித்த செய்திகள், ,ஆரோக்கியத்தை பாதுகாக்க, மருத்துவம் சார்ந்த செய்திகள், கல்வியில் சிறந்திருக்க, கல்வித்துறை சார்ந்த செய்திகள், தொழில்துறையினர் சேவை செய்து வாழ வேண்டும் என்பதற்காக, ரோட்டரி சேவை குறித்த செய்திகள், இப்படி பல பரிமாணங்களில் பயணிக்கும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ், அதன் ஆசிரியர் திரு.முத்துக்குமார் இன்னும் பல வெற்றி பயணங்களை மேற்கொண்டு, சாதனை சரித்திரங்களை உருவாக்க இந்த வெள்ளி விழாவில் மனதார வாழ்த்துகிறேன். பாராட்டி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து முன்னிலை உரை ஆற்றிய சேவை செம்மல் டாக்டர்.முருகநாதன் அவர்கள் தனது வாழ்த்துரையில் பேசியதாவது, பேரன்பிற்குரிய அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த இனிய வெள்ளி விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் . இன்று காந்தி ஜெயந்தி நாள். காந்தி பிறந்த இந்த நாளில் இந்த விழா நடப்பது இன்னும் சிறப்பு. ஏனென்றால், காந்தி தான் நுகர்வோர்களைப் பற்றி மிக தெளிவான கருத்துக்களை நமக்கு அளித்துள்ளார். நுகர்வோர் என்பவர் யார்? நுகர்வோர்களின் அடிப்படை தேவை என்ன? என்பதை நமக்கெல்லாம் கற்றுக் கொடுத்தவர் காந்தியடிகள். நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு. முத்துக்குமார் தனது வெள்ளி விழாவை காந்தி ஜெயந்தி அன்று நடத்துவது சாலச்சிறந்தது. ஆண்டுதோறும் தொழில்துறையினரை, சேவையாளர்களை, மருத்துவர்களை, சாதனையாளர்களை அடையாளம் கண்டு தனது பத்திரிகையின் சார்பாக அவர்களை பாராட்டி தனது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆண்டு விழாவை டாக்டர். அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கும் விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது. இந்த விழாவில் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் தொழில்துறையினர் இருக்கிறீர்கள், மருத்துவர்கள் சார்பாக ஏராளமான மருத்துவர்களும் நானும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன் என்றால் அதற்குக் காரணம் திரு.முத்துக்குமார் அவர்கள் தான். ஏனென்றால், தொழிலில் நீங்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றால், ஆரோக்கியம் முக்கியம். அப்படி ஆரோக்கியத்தை பாதுகாக்கிற மருத்துவர்களையும், அடையாளம் கண்டு பேட்டி எடுத்து அவர்களின் சிறப்பு தன்மைகளையும், சிகிச்சை முறைகளையும் ,தனது பத்திரிகையிலும் யூடியூப் சேனலிலும் பேட்டியாக அவர் வெளியிடுகிறார். அத்துடன் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளையும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டி மகிழ்கிறார். கடந்த வாரத்தில் நான் அமெரிக்க சென்ற போது இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வந்து கொண்டிருந்தது. அடுத்த வாரம் முத்துக்குமார் நடத்துகிற வெள்ளி விழாவில் கலந்து கொள்ள வேண்டும். முத்துக்குமார் எல்லோருக்கும் விருது கொடுக்கிறார். வெள்ளி விழாவாகவும் இது அமைந்திருக்கிறது. எனவே, அனைவரையும் பாராட்டுகிற அவரைப் பாராட்டி இது 25வது ஆண்டு வெள்ளி விழாவாக இருப்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது நமது அண்ணன் டாக்டர் சக்திவேல் அவர்கள் கரங்களால் வழங்க வைக்க வேண்டும் என எண்ணினேன். நான் அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிற விருதான ஆஸ்கர் விருதின் அமைப்பில் இருக்கிற விருதுகளை அங்கே வாங்கி இங்கே கொண்டு வந்திருக்கிறேன். அவரோடு சிறந்த மனிதர் விருதை திரு.அருள் செல்வம் அவர்களுக்கும், மற்றொரு விருதை திரு.தாமோதரன் அவர்களுக்கும், சிறப்பாக ரோட்டரி சேவை செய்து வரும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு.தனசேகர் அவர்களுக்கும், இந்த நால்வருக்கும் உங்கள் முன்னிலையில் நானும், அண்ணன் அவர்களும் இணைந்து விருது வழங்க இருக்கிறோம். திரு.முத்துக்குமார் நடத்தும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மட்டுமல்ல 50 ஆம் ஆண்டு பொன் விழாவையும் கண்டு புகழடைய மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் அவர்கள் தனது உரையில் தெரிவித்ததாவது. நுகர்வோர் எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த இனிய வெள்ளி விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தொழில்துறைக்காக மட்டுமே கடந்த 25 ஆண்டு காலம் பயணிப்பது இந்தத் தொழில் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. தொழில்துறை சார்ந்த எந்த தகவல்களையும் நாங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உடனடியாக தொடர்பு கொள்வது இதன் ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களைத்தான். ஏதேனும் ஒரு தகவல் வேண்டுமென்றால், உடனடியாக அவரிடம் தொலைபேசி வழியாக அழைத்து கேட்கும் போது அடுத்த சில நிமிடங்களில் அவரிடமிருந்து தொடர்பு எண் உட்பட அனைத்து தகவல்களையும் அவர் எங்களுக்கு வழங்கி தொழில்துறைக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அதிலும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சிகளையும், தொழில் துறையினருக்கு கொண்டு சேர்த்து தொழில் தகவல்கள் அனைவருக்கும் உடனுக்குடன் அறியப்பட செய்திகளை வெளியிடுவது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தான். எங்கள் அருமை அண்ணன் பத்மஸ்ரீ டாக்டர்.சக்திவேல் அண்ணன் அவர்கள் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி வைத்து அதனுடைய மகத்தான பணிகளை பாராட்டி மகிழ்வது போல, எங்களுக்கும் அவர் ஆசானாய் இருந்து, எங்களது தொழில் சார்ந்த பயணங்களில் வழிகாட்டியாய் இருந்து வருகிறார். அவரை வணங்கி மகிழ்கிறேன். ஏனென்றால் அவர் நினைத்திருந்தால் இன்னும் பல பெரிய நிறுவனங்களை இந்தியா முழுவதும் தொடங்கி மிகப் பெரும் பொருளீட்டி இருக்க முடியும். அப்படி நினைக்காமல் இந்த ஊர், இந்த தொழில் சிறப்புடன் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பாடுபட்டு, எங்களை எல்லாம் வழி நடத்தி செல்வது உண்மையிலேயே எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். தொழில் சார்ந்த 

எந்த தகவல்களையும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தொழில்துறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் எதிர்பார்ப்பு இல்லாமல், லாப நோக்கில்லாமல் செயல்படுபவர் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் அவரது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் யூடியூப் சேனலும் அவரும் இந்திய அளவில் சிறப்பு மிக்க ஒரு ஊடகமாக வளர்வது உறுதி. 50வது ஆண்டு பொன்விழாவும், நூற்றாண்டும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் காணும் என வாழ்த்துகிறேன். குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில் துறையினரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என கருதி அடுத்த தலைமுறை நிர்வாக இயக்குனர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கும் விருது வழங்கிய இந்த வெள்ளி விழாவில் சிறப்பிக்கப்பட்டது பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து சாதனை சரித்திரங்களை நுகர்வோர் எக்ஸ்பிரஸ் உருவாக்கும் என்ற வாழ்த்துக்களோடு எனது வாழ்த்துரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media